விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று (15ம் தேதி) காலை பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கோபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் அன்புமணி ஆதரவாளர்கள், பாமகவினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக புகார்கள் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சேலத்தில் அருள் எம்எல்ஏ மீது நடந்த தாக்குதல் மட்டுமல்லாமல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாமகவிரை அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கி வருவதாக புகார்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டால் அதை சட்ட ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டுமே யாரும் திருப்பி தாக்க கூடாது. அன்புமணி ஆதரவாளர்களால் பாமகவினர் தாக்குதலுக்கு உள்ளானால் சமூக நீதி பேரவையினர் அவர்களை உடனடியாக தொடர்புகொண்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் நாம் பொறுமையாகயும் சாதுர்யமாகவும் இந்த பிரச்னையை கையாள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தனது தலைமையிலான பாமகவை அங்கீகரிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தேர்தல் கமிஷனில் 2 முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் உச்சநீதிமன்றத்தை நாடுவது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.





















