நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை, 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு, தமிழக அரசு விடுத்த கோரிக்கை தொடர்பாக, டெல்டா மாவட்டங்களில், அண்மையில் 3 குழுக்கள் கள ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இருப்பினும், இன்னும் தளர்வு தொடர்பான உத்தரவு கிடைக்கவில்லை. பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்பதால், நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஈரப்பத தளர்வு உத்தரவை விரைவாக வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல் கொள்முதல் கடந்த ஆண்டு 4 லட்சத்து 81 ஆயிரம் மெட்ரிக் டன்னில் இருந்து, இந்த ஆண்டு 14 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை பருவ நெல்கொள் முதலில் புதிய சாதனை என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



















