சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் சத்ய சாய் பாபா ஆலயத்தில், பிரதமர் நரேந்திரமோடி வழிபாடு நடத்தினர்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, ஸ்ரீசத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன், அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார்.
புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
இந்நிலையில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், கடந்த 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தொடங்கியது. 24ம் தேதி வரை நடக்கும் விழாவில், உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திரமோடி, இன்று காலை சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபாடு நடத்தினார். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் நடைபெற்ற விழாவில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், சிறப்பு அஞ்சல் தலையையும், 100 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.





















