விவசாயிகள் மாநாட்டினை துவங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி இன்னும் சற்று நேரத்தில் கோவை வருகிறார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடீசியா அரங்கில், இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கிவைத்து, இயற்கை விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துரையாட உள்ளார். இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளையும் மோடி வழங்குகிறார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து, விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் கொடீசியா அரங்கத்திற்கு செல்கிறார். அப்போது, தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பிலும், பிஜேபி சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இயற்கை விவசாயிகளுடன் கலந்துரையாடுவதுடன், அவர்களின் கருத்துகளை பிரதமர் கேட்டறிய உள்ளார்.
மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் பிரதமர் வழங்குகிறார். பிரதமர் இந்த திட்டத்தை துவக்கி வைத்த உடன், விவசாயிகளின் வங்கி கணக்கில், இந்த தொகை வரவு வைக்கப்படும்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



















