முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு முதலீடு வரவில்லை என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள தொழில் முதலீடுகளை ‘பொய் முதலீடுகள்’ என்ற தலைப்பில், புத்தகமாக அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்திற்கு 11 லட்சத்து 32 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் 34 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும், முதலமைச்சர் தொடர்ந்து பொய் பேசி வருவதாக குறிப்பிட்டார்.
இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட, பல முறை தாம் வலியுறுத்திய போதும், அரசு மறுத்து வருவதாகவும் அவர் கூறினார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 637 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 600 நிறுவனங்கள் இன்னும் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் 7 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலம் 34 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறிய நிலையில், இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார்.



















