அந்தமான் அருகே நாளை மறுநாள் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஒருவாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் சனிக்கிழமை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24ம் தேதி தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இது, மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெறும் என வான¤லை மையம் கூறியுள்ளது.
இதனால், நாளை முதல் தமிழகத்தின் தெற்கு மற்றும் காவ¤ரி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவ¤த்துள்ளது. அதன்படி, நாளை தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நகை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
திங்களன்று கன்னியாகுமரி முதல் மயிலாடுதுறை வரையிலான கடலோர மாவட்டங்களில், செவ்வாயன்று புதுக்கோட்டை முதல் விழுப்புரம் வரையிலான கடலோர மாவட்டங்களிலும், 26ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.


















