மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பள்ளிப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த மாணவர்கள், முன்கூட்டியே இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருமங்கலம் இயங்கும் தனியார் பள்ளிக்கு, 24 குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து, மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர், மாணவர்கள் அனைவரையும் பேருந்தில் இருந்து இறக்கினார். அந்த பகுதியில் வசிக்கும் மக்களும், மாணவர்களை பத்திரமாக மீட்டனர்.
அடுத்த சில வினாடிகளில், வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் தொடந்து மாணவர்கள் அனைவரும் மாற்று பேருந்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிபத்து குறித்து திருமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



















