திருப்பரங்குன்றம் விவகாரத்தால் மதுரையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு செல்ல முயன்ற பிஜேபி தலைவர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா ஆகியோரை போலிசார் தடுத்துநிறுத்தினர்.
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தால் மோதல் ஏற்படுவத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில், பிஜேபி மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திருப்பரங்குன்றம் செல்வதற்காக சிவகங்கையில் இருந்து புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி என்ற இடத்தில் அவரது காரை போலிசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு உருவானது.
இதேபோல, தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றவதற்காக காரில் வந்தார். அவரை திருமங்கலம் அருகே போலிசார் தடுத்து நிறுத்தி செல்லவிடாமல் தடுத்தனர்.
முன்னதாக நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், திமுக-வும், கூட்டணிக் கட்சிகளும் வாக்குவங்கி அரசியலுக்காக இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.



















