எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓ-களின் பணி சுமையை குறைக்க கூடுதல் ஊழியர்களை நியமிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது.
தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், நாடு முழுவதுமே பி.எல்.ஓ-க்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், தவறுகளுக்காக அவர்கள் மீது குற்ற நடவடிக்கைகளை எடுப்பதை கைவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, பி.எல்.ஓக்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவெக மனு முடித்துவைக்கப்படுவதாக கூறினர்.
அதைத்தொடர்ந்து, பீகார் மாநிலம் விவகாரம் தொடர்பான வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சமூக தணிக்கையை தேர்தல் ஆணையம் பின்பற்றலாம் என யோசனை தெரிவித்தார்.
சிறப்பு தீவிர திருத்தம் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குடியுரிமையை பெருமளவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், இது வாக்குரிமை இழப்பு மற்றும் நாடற்ற தன்மைக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, குறுக்கிட்ட தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், எஸ் ஐ ஆர் நடைமுறையே தவறு என்ற கோணத்தை அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் விதைக்க பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

















