மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை என்ற பெயரில் தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தின் சில பகுதிகளை நீக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். அன்று முதல் இன்று வரை அந்தக் கட்சி சமரச அரசியல் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வுகளை தூண்டும் பாடலாக அமைந்த வந்தே மாதரம் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது, பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதம் பாடல் தான் வங்கப் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவின் சுதந்திர வேட்கையை தூண்டும் பாடலாக அமைந்தது என்று மோடி குறிப்ப¤ட்டார்.
1937ம் ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் முகமது அலி ஜின்னா, வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், அதில் சில பகுதிகளை நீக்குமாறு, சுபாஷ் சந்திர போஸீக்கு, ஜவஹர்லால் நேரு கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இந்தப் பாடலில் சில பகுதிகளை நீக்க முடிவு செய்ததன் மூலம், முஸ்லிம் லீக் கட்சியிடம் காங்கிரஸ் மண்டியிட்டுவிட்டது என மோடி குற்றம்சாட்டினார். அப்போது செய்ததை சமசர அரசியலை, இப்போதும் காங்கிரஸ் கட்சி பின்பற்றி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழில் தாயின் மணிக்கொடி பாரீர் எனப் பாடப்பட்ட தேசபக்திப் பாடல் உள்ளிட்ட பல பாடல்கள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.






















