திமுகவுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவார்கள் என்பதால், அதை எதிர்கொள்ள நம் பலத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச் சாவடி என்ற தலைப்பில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, எஸ்.ஐ.ஆர் பணிகளில் தற்போது பாதி கிணறு தான் கடந்துள்ளோம். சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல், வாக்காளர் பட்டியல் வந்தால் தான், முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும் என அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சிக் காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும், எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச்சொல்ல வேண்டும். நடுநிலை வாக்காளர்களும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக இருப்பதால், இரண்டரை கோடி வாக்குகளை பெறுவது சாத்தியமே என்றும் முதலமைச்சர் கூறினார்.
தினந்தோறும் எராளமான பொய்களை பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள். இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.


















