மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக, புதிய மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மக்களவை இன்று கூடியதும், விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட மசோதா என்ற புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான¢ தாக்கல் செய்தார். புதிய மசோதாவின்படி, 100 நாட்கள் வேலை என்பது, இனி 125 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், அதற்கு இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மசோதாவை அறிமுகம் செய்து பேசிய அமைச்சர், முந்தைய அரசுகளை விட, நரேந்திர மோடி தலைமையிலான அரசு கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40 சதவீதமாக குறைத்துள்ளதாக, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மேலும் மகாத்மா காந்தியின் பெயரை நீக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் குறைகூறினார்.
புரியாத மொழியில் புதிய பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவால் தமிழ்நாடு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில், காந்தி பெயரை மாற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் வரும் 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.






















