இன்று பிற்பகல் 1:38 மணியளவில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களில், சுமார் 1:40 மணியளவில், உயரம் இழந்து மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இறந்தார். அவர் வணிக வகுப்பில், இருக்கை எண் 2D-ல் பயணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் ரூபானி, தனது மகளைப் பார்க்க லண்டனுக்கு பயணித்திருந்தார்.
விபத்து நடந்த உடனே அவசரகால சேவைகள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு, விபத்துக்கான காரணத்தை ஆராய பயன்படுத்தப்படவுள்ளது.