இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘வாக் ஆஃப் ஃபேம்’ (Hollywood Walk of Fame) 2026-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்று, முதல் இந்திய நடிகையாக வரலாறு படைத்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்திய சினிமாவின் உலகளாவிய செல்வாக்கையும், தீபிகாவின் சர்வதேச அளவிலான பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது.
வாக் ஆஃப் ஃபேம்’ அறிவிப்பு
ஹாலிவுட் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்திய நேரலை பத்திரிகையாளர் சந்திப்பில், 2026-ஆம் ஆண்டுக்கான ‘வாக் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இடம்பெறும் 35 பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில், மோஷன் பிக்சர்ஸ் (Motion Pictures) பிரிவில் தீபிகா படுகோனின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவருடன், மைலி சைரஸ், டிமோத்தி சலமே, எமிலி பிளன்ட், ரேச்சல் மெக்ஆடம்ஸ், டெமி மூர், ரமி மாலெக், ஸ்டான்லி டூசி, மரியன் கோட்டிலார்ட், பிராங்கோ நீரோ, மற்றும் செஃப் கோர்டன் ராம்சே ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல், ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பரிந்துரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு,
ஜூன் 25-ஆம் தேதி சேம்பரின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.தீபிகாவின் பயணம் தீபிகா படுகோன், 2006-ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான ‘ஐஸ்வர்யா’ மூலம் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். 2007-ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ‘ஓம் ஷாந்தி ஓம்’ திரைப்படம் அவரை இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, ‘பத்மாவத்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பிகு’, ‘ஜவான்’, ‘பதான்’, ‘பைட்டர்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.
2017-ஆம் ஆண்டு, வின் டீசலுடன் இணைந்து ‘xXx: Return of Xander Cage’ திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட்டில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, கேன்ஸ் திரைப்பட விழா, மெட் காலா, மற்றும் 2023-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடலை உலக அரங்கில் அறிமுகப்படுத்தியது உள்ளிட்ட பல சர்வதேச மேடைகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இதுமட்டுமின்றி, 2018-ஆம் ஆண்டு TIME இதழின் உலகின் 100 மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலிலும், 2022-ஆம் ஆண்டு TIME100 இம்பாக்ட் விருது மூலமாகவும் அவரது செல்வாக்கு அங்கீகரிக்கப்பட்டது.
திரைப்படங்களுக்கு அப்பால், தீபிகா படுகோன் மனநல விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். 2015-ஆம் ஆண்டு தனது ‘Live Love Laugh’ அறக்கட்டளையைத் தொடங்கி, மனநல பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக 2020-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் கிரிஸ்டல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல் இந்தியராகவும் பெருமை பெற்றார்.ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம்:
ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்பது, லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட் பவுல்வார்டில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும், இங்குத் திரைப்படம், தொலைக்காட்சி, இசை, நேரடி நாடகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நட்சத்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான பரிந்துரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தீபிகாவின் இந்த சாதனை, இந்திய சினிமாவின் உலகளாவிய அங்கீகாரத்தை பறைசாற்றுவதுடன், தெற்காசிய பிரதிநிதித்துவத்தை உலக மேடையில் உயர்த்தியுள்ளது.தீபிகாவின் எதிர்கால திட்டங்கள் தீபிகா தற்போது, ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். மேலும், அல்லு அர்ஜுனுடன் இணைந்து இயக்குநர் அட்லீயின் ‘AA22xA6’ (தற்காலிக தலைப்பு) என்ற பான்-இந்திய திரைப்படத்திலும், ஷாருக்கானுடன் ‘கிங்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர, தனது தந்தை பிரகாஷ் படுகோனுடன் இணைந்து ‘படுகோன் ஸ்கூல் ஆஃப் பேட்மிண்டன்’ என்ற அமைப்பை தொடங்கி, இளம் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், தீபிகாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் கொண்டாடினர். இருப்பினும், X தளத்தில் சிலர் இந்த விருது “கட்டண அடிப்படையில்” வழங்கப்படுவதாகவும், இதற்கு சுமார் 85,000 டாலர் (தோராயமாக 73 லட்சம் ரூபாய்) செலவாகும் என்றும் கருத்து தெரிவித்தனர். இது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், தீபிகாவின் இந்த சாதனை இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.