தமிழக அரசு அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக வெளியான செய்திகளை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அனுப்பிய 211 சட்ட மசோதாக்களில் 170 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 95 சதவீத மசோதாக்களுக்கு 3 மாதங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறது.
13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடந்த மாதம் அனுப்பப்பட்ட 8 மசோதாக்கள், ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 170 மசோதாக்களில் 73 மசோதாக்கள் ஒரு வாரத்திலும், 61 மசோதாக்கள் ஒரு மாதத்திலும் 27 மசோதாக்கள் 3 மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டன. 27 மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளன. ஆளுநர் நிறுத்திவைத்துள்ள 10 மசோதாக்களுக்கு தமிழக அரசிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநரைப் பொறுத்தவரை, அனைத்து மசோதாக்களையும் கவனமாக ஆராய்ந்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளித்து வருவதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் இந்த ஒப்புதல் நடைபெறுவதாகவும் அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.



















