தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக, திமுக தொடர்ந்த வழக்கை, வரும் 11 ஆம் தேதி விசாரிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், அதை நிறுத்திவைக்கக்கோரி, திமுக சார்பில் அதன் அமைப்புச¢செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், பீஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் தீவிர திருத்த பணிகளில், நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே, அவசர அவசரமாக தமிழ்நாட்டில், இந்த திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொள்வது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற, இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழலில், அவசரமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது, நியாயமான நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். தேர்தல் கமிஷன் கேட்கும் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
இதனால், பலரும் தங்களுடைய ஓட்டுரிமையை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது. அதனால், வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில், திமுக சார்பில் முறையிடப்பட்டது. அப்போது, வரும் 11ம் தேதி விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் நிலையில், பீகாரில் இதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் முறையிட்டார். இதையடுத்து அந்த வழக்கையும், வரும் செவ்வாய் கிழமை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.






















