வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, 4 வழித்தடங்களில் வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். இதில் ஒரு ரயிலின் வழித்தடம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் பனாரஸ் நகரில் இருந்து மத்திய பிரதேசத்தின் கஜூராகோ இடையேயும், உத்திரப்பிரதேசத்தின் ஷஹாரான்பூர் முதல் லக்னோ இடையேயும் இன்று முதல், வந்தே பாரத் ரயில் சேவை துவங்கி இருக்கிறது. இதேபோல், பஞ்சாபின் பிரோஸ்பூர் நகருக்கு, டெல்லியில் இருந்து வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூரு வரை, வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய தொழில் வர்த்தக நகரங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையையும், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் இன்று துவக்கி வைத்தார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர், வந்தே பாரத் ரயிலால், சுற்றுலா பயணிகள் பயன்பெறுவதுடன், தமிழகம், கேரளா, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார்.
இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலம், சுற்றுலா மேம்பட்டிருக்கிறது.
வாரணாசியில் உள்ள புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள், உத்திரப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.





















