பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடி பழனிசாமியின் அற்பத்தனம் அம்பலமானது என, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி, மாயமாகி உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
கோவை நிகழ்வில் காவல் துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. தன்னை ன்னை யாரும் கடத்தவில்லை என, அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதை, ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதே போல காணாமல் போன கண்ணகி நகர் மாணவியை, போலீஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். உண்மை இப்படியிருக்க, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என, எடப்பாடி பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி, நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல், தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் திராவிட மாடல் அரசு, அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும், இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.


















