கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலம் சரியில்லாததால், தற்காலிக அவைத் தலைவராக தேர்வான கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அரசியலில் பொது எதிரியாக திமுக-வை முன்நிறுத்தி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமது தலைமையையும், நோக்கத்தையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணிவைக்கும் அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பிஜேபியின் அடிமை என்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு, வரும் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். இதன்மூலம், கூட்டணி ஆட்சி என்ற பிஜேபியின் திட்டத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற பழனிசாமி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியும், பிஜேபி கூட்டணியும் வாங்கிய வாக்குகளை கூட்டினால் 84 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகத்தெரிவித்தார்.
ஊழல் செய்த திமுக அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும், இன்னும் 100 நாட்களில் அவர்கள் எங்கு பத்திரமாக இருக்க வேண்டுமோ, அங்கு இருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
525 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட திமுக நிறைவேற்றவில்லை. தற்போது தேர்தல் வருவதால், 30 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க இருப்பதாக விமர்சித்தார். வரும் பொங்கல் பண்டிகைக்காவது குடும்பத்திற¢கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அரசை வலியுறுத்தினார்.



















