பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவின் பிரையா கிராண்டே நகரில் 2025 ஜூன் 21 காலை, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக் காற்று பலூன் (Hot Air Balloon) ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். பலூனில் பயணித்த 21 பயணிகளில், பைலட் உட்பட 13 பேர் உயிர் பிழைத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில ஆளுநர் ஜோர்ஜின்ஹோ மெல்லோ தெரிவித்தார்.
இந்தச் சம்பவம்குறித்து உள்ளூர் செய்தி நிறுவனமான G1 வெளியிட்ட காணொளியில், பலூன் வானில் இருக்கும்போதே தீப்பற்றி எரிவதையும், புகைமூட்டத்துடன் தரையை நோக்கி விழுவதையும் காண முடிந்தது. பலூனின் கூடையில் இருந்த மாற்று டார்ச்சிலிருந்து தீப்பற்றியதாகப் பைலட் தெரிவித்ததாக Jornal Razão செய்தித்தாள் கூறியது. பைலட், தீக்கண்டவுடன் பலூனைத் தரையிறக்க முயன்று, தரையை நெருங்கியவுடன் பயணிகளைக் குதிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரையா கிராண்டே பகுதி, பள்ளத்தாக்கு நிலப்பரப்புகளால் பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது “பிரேசிலிய கப்படோசியா” என்று அழைக்கப்படுகிறது. இங்கு வெப்பக் காற்று பலூன் பயணங்கள் மிகவும் பிரபலமாகும், குறிப்பாக ஜூன் மாதத்தில் கத்தோலிக்க புனிதர்களைக் கொண்டாடும் பண்டிகைகளின்போது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சாண்டா கேடரினா மாநில தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
இந்தத் துயர சம்பவம்குறித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டாச்சில்வா தனது இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என X தளத்தில் பதிவிட்டார். இந்த விபத்து, பிரேசிலில் வெப்பக் காற்று பலூன் பயணங்களின் பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த வாரம், சாவோ பாவ்லோ மாநிலத்தில் இதே போன்ற மற்றொரு பலூன் விபத்தில் ஒரு பெண் உயிரிழந்து 11 பேர் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.