சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையமானது 53 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையின் அதீத வளர்ச்சியால், இங்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் நாளடைவில் வெகுவாக அதிகரித்தது.
இந்நிலையில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கோரிக்கையை ஏற்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 11 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மார்ச் 14-ம் தேதியன்று, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, 26 ஆயிரத்து 346 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. பல்வேறு நவீன வசதிகளுடனும், பேருந்துகள் எளிதில் வந்து செல்ல ஏதுவாகவும், கட்டப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின¢ இன்று திறந்து வைத்தார்.
இதேபோல், ஆவடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையை உதயநிதி ஸ்டாலின¢திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசசர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆவடி மாநகர மேயர் உதயகுமார் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



















