குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (68), அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தக் கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ. பரிசோதனைமூலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற விஜய் ரூபானியின் இறுதி சடங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காவிர் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அமித்ஷா தனது எக்ஸ் பதிவில், “விஜய் ரூபானி, பாஜகவுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு ஒழுக்கமான, விசுவாசமான தலைவர். அவரது இழப்பு எனக்குத் தனிப்பட்ட பேரிழப்பாகும்,” என்று தெரிவித்தார்.
விஜய் ரூபானி, 2016 முதல் 2021 வரை குஜராத் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். லண்டனில் உள்ள தனது மகள் ராதிகாவைப் பார்க்கவும், மனைவி அஞ்சலியை அழைத்து வரவும் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, விபத்து இடத்தைப் பார்வையிட்டு, ரூபானியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விபத்துகுறித்து மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டில் உறுதிப்படுத்தியதுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.