அரசு தோல்விகளையும் மக்கள் படும் கஷ்டங்களையும் நிராகரிப்பதற்காகத்தான் எஸ் ஐ ஆர்-ஐ திமுக எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 4 ஆயிரத்து 379 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தமிழக பிஜேபி நிர்வாகிகள் கோவையில் கூடி ஆலோசனை நடத்தினர்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறுத்தும்,பிரசார வியுகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பிஜேபி அரசின் திட்டங்களை பொது மக்களிடன் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு சரியான நிதி பங்கீடு கொடுக்கவில்லை என பொய்யான பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் திமுக காங்கிரஸ் கூட்டணியோடு மத்திய அரசில் பங்கு வகித்தபோது எஸ் ஐ ஆர் ஐ ஏன் எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியில் மட்டுமே 4 ஆயிரத்து 379 போலி வாக்காளர்கள் உள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.பல்வேறு குழப்பங்களை தவிர்த்து ஒவ்வொருவரும் சரியான தகவல்களோடு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே எஸ் ஐ ஆர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.



















