உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் நெல் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளப் பதிவில் தெரிவித்துள்ள ஸ்டாலின், கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி, பிரதமர் வந்து சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரலோ விவசாயிகளின் அழுகுரலோ பிரதமரின் காதுகளுக்கு கேட்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தமிழ்நாட்டின் இந்த கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து, அவற்றின் மீது நல்ல முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



















