அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று, காலை 05.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுவடைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை கொமோரின் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே, கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.


















