இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் உயரிய குடிமகன் விருதான ‘aதி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்டு டொபாகோ’ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது, அவரது சிறந்த தலைமைத்துவத்தையும், உலகளாவிய அளவில் இந்தியாவின் பங்களிப்பையும் பாராட்டி வழங்கப்பட்டது.பிரதமர் மோடி தனது 8 நாள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு வருகை தந்திருந்தார். இந்தப் பயணத்தின்போது, டிரினிடாட் மற்றும் டொபாகோவின் அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலூ (Christine Carla Kangaloo) மற்றும் பிரதமர் கமலா பெர்சாட்-பிஸ்ஸேசர் (Kamla Persad-Bissessar) ஆகியோர் அவருக்கு இந்த உயரிய விருதை வழங்கினர்.
இந்த விருது, இந்தியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தியதற்காகவும் அவருக்கு அளிக்கப்பட்டது.விருதைப் பெற்ற பின்னர், பிரதமர் மோடி தனது உரையில், “இந்த விருது எனக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு மரியாதையாகும். இந்தியா-டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான நட்புறவு நீடித்து, மேலும் வலுவடையும். இந்த விருதை இந்தியாவின் இளைஞர்கள், கலாசாரம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்று கூறினார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் இந்தியாவின் ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரு குடும்பம்) என்ற தத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்தப் பயணத்தின் மூலம், பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து, அவர்களுடன் உரையாடினார். இந்திய கலாசாரத்தை அந்நாட்டில் பரப்புவதற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.இந்த விருது, பிரதமர் மோடி பெற்ற 14-வது சர்வதேச விருதாகும். இதற்கு முன்பு, கானா, எகிப்து, பூடான், அமெரிக்கா, பப்புவா நியூ கினி உள்ளிட்ட 13 நாடுகளின் உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்த விருது, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மற்றும் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு மற்றொரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.