டெல்லி அருகே நொய்டாவில் குழந்தைகள், இளம்பெண்கள் என 29 பேர் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட நிதாரி வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுரேந்தர் கோலியை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே கடந்த 2006-ம் ஆண்டில், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கொலைசெய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட பங்களா உரிமையாளரான மொஹந்தர் சிங் புந்தேர், சுரேந்தர் கோலி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. சுரேந்தர் கோலிக்கு மொஹிந்தர் சிங் உதவியாக இருந்தாகவும் தொடரப்பட்ட வழக்கில் காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் இருவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. என்றாலும், அலகாபாத் உயர்நீதிமன்றம் இருவரையும் 2023-ம் ஆண்டில் விடுதலை செய்தது. உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மற்றும் உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் மொஹிந்தர் சிங் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கில் சுரேந்தர் கோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, அந்த வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



















