புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை நடத்தும் பிரசார பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில காவல்துறை விதித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய், முதன் முறையாக நாளை புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, உப்பளம் துறைமுகம் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் 5 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர் குறியீடுகளுடன் செல்லுபடியாகும் பாஸ்களை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கலைவாணன் தெரிவித்தார்.
இதேபோல, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், மரங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் போன்வற்றில் தொண்டர்கள் ஏறக்கூடாது, விஜய்யின் வாகனத்தை பின்தொடரக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்சியினருக்கு விதித்துள்ளார்.
இந்நிலையில், கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கரூர் மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் கலைவாணி, ஆய்வாளர் மார்டின் ஆகியோர் ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர். முன்னதாக இன்று காலையில் தவெக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று ஆஜராகினர்.



















