விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுாரை சேர்ந்த கமலேஷ் (20),புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலையில் இளநிலை குற்றவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், கோரிமேடு பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
அதனை, அறிந்த தட்டாஞ்சாவடி,ஞானதியாகு நகர்,ஒத்தவாடை வீதியை சேர்ந்த பெயின்டர் ரிச்சர்டு, அவரது மகன் விபிஷன் ஆகியோர்,சில மாதங்களுக்கு முன் கமலேஷை அழைத்து அந்த பெண் தனது உறவுக்கார பெண் எனவே இனிமேல் பேசக் கூடாது எனக் கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து காதலை கண்டித்ததால் பிரச்சனை ஏற்பட்டு அப்பெண் கமலேஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் இதுகுறித்து சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த தனது நண்பரான புதுச்சேரி, சாரம் பகுதியை சேர்ந்த ரவுடி விஜய்(25),என்பவரிடம் கூறியுள்ளார். இதனிடையே இருவரும் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்று, ஞானதியாகு நகரில் உள்ள ரிச்சர்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.
அது வெடிக்காததால், உடனடியாக பெட்ரோல் குண்டு தயார் செய்து வீசியதில் அது வீட்டின் ஜன்னலில் பட்டு வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் ரிச்சர்டு மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் வெடிச் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால், விஜய் மற்றும் கமலேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தன்வந்திரி நகர் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து அங்கு, வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.
மேலும் இதுகுறித்து ரிச்சர்டு அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விஜய், கமலேஷை தேடி வந்தனர்.இந்நிலையில், இருவரும் நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.இருவரையும், 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.






















