சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த 27 வயது இளைஞர் அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) மற்றும் அவரது மகள் நிகிதா ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27, 2025) மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தனர். சிவகாமி வயது முதிர்ந்தவர் என்பதால், அஜித்குமார் அவருக்குச் சக்கர நாற்காலி கொண்டு வந்து உதவியதாகத் தெரிகிறது. பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை காணாமல் போனதாகக் கூறி, திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட ஐந்து பேரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாமல் அஜித்குமார் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம்குறித்து அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு கூடி, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தனது சகோதரரைக் கடுமையாகத் தாக்கியதாகவும், தன்னையும் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், மற்றும் ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடுகள்மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரின் உயிரிழப்புகுறித்து உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் மேலும் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.