காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆரம்பக்கட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால், தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேகதாது அணை தொடரபான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகதாது அணை கட்டுவதன் மூலம் 80 டி.எம்.சி. தண்ணீரை தடுத்து நிறுத்த கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரியின் குறுக்கே ஏற்கனவே போதுமான அணைகள் உள்ளதால், புதிதாக அணை தேவையில்லை என்றும், மேகதாது அணை கட்டுவது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்றும் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது, கர்நாடக அரசு ஆரம்பக் கட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு இப்போதே எதிர்ப்பு தெரிவிப்பது என் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மேகதாது அணை தொடர்பான ஆரம்பக் கட்ட அறிக்கையை தயாரித்து, கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்க நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இந்தப்பிரச்சினையில் மத்திய நீர்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் முன், தமிழகம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கருத்துக்களை கேட்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



















