நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. “கூட்டம் முடிவு செய்ய முடியாது” என்று கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் விமர்சித்து., திரைப்படத் தடை தொடர்பான விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’ தமிழ்த் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு விதிக்கப்பட்ட தடைகுறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தைக் கடுமையாகக் கண்டித்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கமல் ஹாசன், “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால், சில குழுக்கள் திரைப்பட வெளியீட்டைத் தடுக்க அச்சுறுத்தியதை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயன் மற்றும் மன்மோகன் அமர்வு, “சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். மக்கள் திரைப்படம் பார்க்கத் துப்பாக்கியைத் தலையில் வைக்க முடியாது. குண்டர்களின் குழு திரையரங்குகளில் என்ன திரையிட வேண்டும் என முடிவு செய்ய முடியாது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், “யாராவது கருத்து சொன்னால், அதற்கு மற்றொரு கருத்தால் பதில் அளிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என அச்சுறுத்தக் கூடாது,” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் அனுமதி பெற்ற திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கர்நாடக அரசுக்குத் திரைப்பட வெளியீடுகுறித்து தகவல் அளிக்க ஒரு நாள் கெடு விதித்துள்ளது.