நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய, 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, இரு நீதிபதிகள் அமர்வில் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு, சட்டவிரோதம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 30 சதவீதம் என்பது மிக அதிக வட்டி, இப்படி சுரண்டபடுவதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பெரிய பணக்காரன் இல்லை என்றால், திவாலானவர் என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், லைகா நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.



















