வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் பெரும்பாடிரோடு முல்லைநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.அங்குள்ள ஒரு மைதானத்தில் இருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து சிலர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உபயோகப்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் 13 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் சவுத்ரியை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 11 ஆயிரம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.



















