விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, அரசு மதுபான கடை ஊழியர்களிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி, 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சுழியை அடுத்த தொட்டியாங்குளத்தில், அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் ஊழியர்கள் சின்னராஜ், சரவணன் ஆகியோர் நேற்று கடையை மூடிவிட்டு, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாயுடன் புறப்பட்டனர்.
அப்போது முகமூடி அணிந்து அங்கு வந்த மர்ம நபர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, டாஸ்மாக் கடை ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


















